பக்கம் எண் :

301

  அதி. 8--மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
 

        ஈன்ற மகவோம்பார்க் கிருதிணையும் இன்றாம்

601
படுதொழில் விலங்குந்தன் பறழ்வ ளர்ந்துடல்
நெடுமையாங் காறுநன் கோம்பி நிற்குமால்
தொடுமுயர் திணைமரீஇச் சுதர்க ணன்பிலாக்
கொடுமையோர்க் கொருதிணை கூற வின்றரோ.
  கொடுந்தொழில் செய்யும் அரிமா முதலிய விலங்குகளும் தங் குட்டிகள் வளர்ந்து தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ளும் நிலைமை வரும்வரையில் அவற்றைப் பேணுகின்றன. ஆறறிவாகிய கொள்ளுவன தள்ளுவனவாம் வழியறியும் கருத்துடைய உயர்திணை மக்களாய்ப் பிறந்தும் தாம் பெற்ற பிள்ளைகளிடத்து அன்பின்றிக் கொடுமை செய்வரேல், அவர் உயர்திணை அஃறிணை இரண்டுமிலராய்க் காணப்படுவர். அவர் இல்திணையராம் ஒழுக்கமற்றவராவர்.
  படுதொழில்-கொடுஞ்செயல். சுதர்கள்-மக்கள். ஓம்பல்-பேணல். திணை-ஒழுக்கம்.
 

1

  திருந்தா மக்களைத் தெய்வமும் ஒறுக்கும்
602
முறையில்சே யரைத்தன்ன முனிய வஞ்சுவீர்
கறைமிகு மவரைப்பார் காக்கும் வேந்தனும்
இறைவனுந் தண்டனை யியற்று வாரினித்
தரையிலெவ் வாறதைச் சகித்துய் வீர்களே.
  நன்னெறி யொழுகாது புன்னெறி யொழுகும் நலமில்லாத தீயமக்களைச் சிறிது சினந்து நல்வழிப் படுத்த அஞ்சும் பெற்றோர்களே! கழுவப்படாக் குற்றம் கெழுமிய மக்களை உலகங்காக்கும் வேந்தனும் அண்டமுங்காக்கும் ஆண்டானும் முறைமுறையாய்த் தண்டிப்பர். அத்தண்டனைகளைத் தடுக்க உங்களால் முடியாது. அந்தோ! அவற்றைக் கண்டும் கேட்டும் எவ்வாறு பொறுத்து வாழ்வீர்கள்.
  முறை-ஒழுங்கு. சேய்-மக்கள். முனிய சினக்க. கறை-கழுவமுடியாக் குற்றம். வேந்தன்-மன்னன். இறைவன்-ஆண்டவன். சகித்தல்-பொறுத்தல். தன்னம்-சிறுமை; சிறிது.
 

2