| நீதிநூல் |
| உரியநன் னூலுணர்த் தாமை கூடையால் எரியொளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே. |
|
| பெண்கள் அன்பு நிறைய இருளினில் ஒளிதரும் விளக்குப் போல விளங்குவர். அவர்களுக்குரிய நல்ல நூல்களை உணர்த்தாதிருப்பது விளக்கைக் கூடையால் மறைப்பதை ஒக்கும். |
| அரிவை-பெண். நேசம்-அன்பு. ஆர-நிறைய. அல்-இருள். |
| 6 |
| படிப்பிலாப் பெண்ணேல் பாதியுடற் கழகிலை |
100 | நீதிநூன் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர் ஓதியர்க்கு ஓதிடா தொழித்தன் மெய்யினில் பாதியை யேயலங் கரித்துப் பாதிமெய் மீதினி லணியின்றி விடுத்தல் ஒக்குமே. |
|
| அறமுறை நூல்களை ஆண்களுக்கு உணர்த்திப் பெண்களுக்கு உணர்த்தாதிருப்பது, உடம்பில் ஒரு பாதியை ஆடை அணிபூச்சால் அழகு செய்து, மற்றொரு பாதியை அழகு செய்யாமல் விடுவதை யொக்கும். |
| நீதி-அறமுறை. மைந்தர்-ஆண்கள். ஓதியர்-கூந்தலையுடைய பெண்கள். அலங்கரித்தல்-அழகுபடுத்தல். |
| 7 |
| கண்போற் பெண்களும் காணிற் சமமே |
101 | இக்கினை நகுமொழி யெழின்மின் னாரின்ஆண் மக்கள்மிக் கோரெனல் மடமை யாமிரண்டு அக்கமும் ஒக்குமே யன்றி நல்லகண் எக்கண்மற் றெக்கணே யிழிவு டைக்கணே. |
|
| கரும்புங் கசக்கும்படி இனிய சொற்களைச் சொல்லும் அழகிய பெண்களைக் காட்டிலும் ஆண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லுவது அறியாமை ஆகும். இரண்டு கண்களுள் உயர்ந்த கண் எது? இழிந்த கண் எது? (இரண்டும் சமமே.) |
| இக்கு-கரும்பு. அக்கம்-கண். |
| 8 |