| அதி. 10 - உடன் பிறந்தாரியல்பு |
| உடன்பிறந் தார்க்குத் தந்தைதாய் வீடொன்றே |
104 | தந்தைதா யொருவர் தம்மைத் தாங்கிய வுதர மொன்று முந்தவின் பால ருந்து முலையொன்று வளரு மில்லொன்று இந்தவா றெல்லா மொன்றா யியைந்தசோ தரரன் புற்றுச் சிந்தையு மொன்றிப் பாலுந் தேனும்போல் விளங்கல் நன்றே. |
|
| ஒரு வயிற்றுத் தோன்றிய உடன் பிறந்தார்க்குத் தந்தை தாயர் ஒருவர்; ஈன்ற வயிறும் ஒன்று; பருகிய இனிய பாலும் ஒன்று; வளரும் வீடும் ஒன்று. இவ்வாறெல்லாம் பலவும் ஒன்றாக யமைந்த உடன் பிறந்தார், அன்பு பூண்டு உள்ளமும் பொருந்திப் பாலும் தேனும்போல் விளங்குவது நன்மையாம். |
| உதரம்-வயிறு. சோதரர்-உடன் பிறந்தார். சிந்தை-உள்ளம். |
| 1 |
| எல்லோரும் உடன்பிறப்பேல் இயைந்தாருக் களவெவன் |
105 | ஆதரை மிசைநர ராய யாவருஞ் சோதர ரெனமிகத் துன்னல் நன்றென வேதமே யோதுமால் விளக்குஞ் சோதரர் மீதமை நட்பினை விளம்பல் வேண்டுமோ. |
|
| உலகத்தில் மக்களாய்த் தோன்றியவர்கள் எல்லோரும் உடன்பிறந்தாராய் ஒற்றுமையுடன் வாழ்தல் நன்றென்று மறைநூல் சொல்லும். ஆயின் ஒருதாய் வயிற்றுப்பிறந்த உடன் பிறந்தார் அன்பும் ஒற்றுமையும் கொண்டு வாழவேண்டும் பொறுப்பைக் கூறவும் வேண்டுமோ? |
| நரர்-மக்கள். துன்னல்-நெருங்கல், ஒற்றுமை. விளம்பல்-சொல்லல். |
| 2 |