பக்கம் எண் :

55

 உடன் பிறந்தாரியல்பு
 
 குடும்பம் பேணாரைக் கொள்ளார் உயர்ந்தோர்
106
பயந்தவர் சோதரர் தமரைப் பண்பொடு
வியந்துபே ணாதவன் வேறு ளோர்களை
இயைந்துபே ணானென எண்ணி நீக்குவர்
உயர்ந்தவ ரவனொடும் உறவு தன்னையே..
 

பெற்றோர்களையும் உடன் பிறந்தார்களையும் உறவினர்களையும் அன்பொடு பேணாதவன், மற்றையோர்களை இணங்கிப் பேணமாட்டா னென்று கருதி உயர்ந்தோர் அவனுடன் உறவு கொள்ளுதலை நீக்குவர்.

 

பயந்தவர்-பெற்றோர், தாய்தந்தையர். தமர்-உறவினர்.

 

3

 ஒற்றுமைசேர் உடன்பிறப்பை ஒருவரும் வெல்லார்.
107
ஒற்றையொண் சுடரினை யொழிக்கும் மெல்வளி
கற்றையாப் பலசுடர் கலப்பின் மாவளி
சற்றும்வெல் லாதுசூழ் தமர்ச கோதரர்
பற்றொடு மருவிடிற் படரு றார்களே.
 பலதிரியும் ஒன்றாகி எரியும் சுடரினைப் பெருங் காற்றாலும் அவிக்கமுடியாது. ஆனால் ஒருதிரியாய்த் தனித்து எரியின் சிறு காற்றும் அணைத்துவிடும். அதனால், ஒற்றுமையாயுள்ள உடன் பிறப்பாளர்களை எவரும் வெல்லக்கருதார் என்பது துணிபு.
 மெல் வளி-சிறு காற்று.
 

4

 அமைஉடன் பிறப்பை வெல்லார் அனைவரும்
108
ஓரிழை யறுத்திடல் எளிதொன் றாகவே
சேரிழை பலவுறத் திரித்த தாம்பினை
யாருமே சிதைத்திடா ரமைச கோதரர்
சீரொடு பொருந்திடில் திரல்கொள் வாரரோ.
 கயிறாதற்குரிய ஓர் இழையினை அறுத்தல் யாவர்க்கும் எளிது. அவ்விழை பல ஒன்றாகிக் கயிறாக அமையின், அதனை யாராலும் அறுத்தல் முடியாது. அதுபோல உடன் பிறந்தார் பிரிந்து போய்த் தனிப்பாரானால் எளியரும் எளிதில் வெல்லுவர். ஒன்றுகூடி வாழின் வலியரும் அரிது முயன்றும் வெல்லார்.
 தாம்பு-கயிறு. சிதைத்திடார்-அறுத்திடார்.
 

5