பக்கம் எண் :

92

  நீதி நூல்
 
 

வறியவர்போல் துன்பெலாம் வருமே செல்வர்க்கும்

187
தாழ்ந்தவ ரெனச்செல் வர்க்கும் சாப்பிணி மடமை யச்சஞ்
சூழ்ந்தபே ரிடர்கள் பாவந் துஞ்சிமண் ணாத லள்ளல்
வீழ்ந்தவ லித்த லாதி மிகையெலாம் எய்தும் இவ்வாறு
ஆழ்ந்தவ் விருதி றத்தார்க் காகும்வேற் றுமையா தம்மா.
  தாழ்ந்தவரைப்போலவே செல்வர்க்கும் உடல்நோய், அறியாமை, நடுக்கம், துன்பங்கள், பாவம், இறப்பு, இருளுலகத் துன்பம் முதலிய தண்டனைகள் உண்டாகும். இவ்வகையான் (துன்பத்து) அழுந்திய இருவகையானவர்க்குள்ளும் உண்டாகும் வேற்றுமை யாது?
  சடம்-உடல். மடமை-அறியாமை. இடர்-துன்பம். துஞ்சி-இறந்து. அள்ளல்-இருளுலகம் (நரகம்). அவலித்தல்-துன்புறல். மிகை-தண்டனை.
 

13

  சிறந்தோர் தாழ்ந்தோரைப் பேணுதல் செல்வம்
188
பதிமுத லதிகா ரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர்
மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம்
விதிவழி யொழுகித் தம்மை மேவுறு தாழ்ந்தோர் தம்மை
அதிதயை யொடுநன் கோம்பி யாண்டிடக் கடனா மாதோ.
  நாடாள் மன்னர். அந்தணர், வேளாளர் எனப்படும் சிறந்தோர், வணிகர், உயிர் நோயாகிய அறியாமையை அகற்றும் நூலாசிரியர், உடல் நோய் தீர்க்கும் மருத்துவர் முதலியோர் தங்கள் தங்களுக்குரிய முறைதவிராமல் நடந்து தம்மைச் சார்ந்து வாழும் தாழ்ந்தோரை மிக்க பரிவுடன் பாதுகாத்துப் பேணுதல் கடமையாம்
  பதி-நாடு. பண்ணவர்-அந்தணர்; முனிவர். உழவர்-வேளாளர். பரதர்-வணிகர். அதிதயை-மிக்க பரிவு.
 

14