பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர். ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும், உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று வாதிடுகின்றனர். சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து, அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம் இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து |