பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்13


அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது;  உலகையும்,  உலகப்  பொருள்களையும்  படைக்க  வல்லது. தாம்
படைத்த  பொருளை  அறியாமல்  வைத்திருக்கவும்  காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது.  உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

     இதில்  எங்கும்  நிறைந்த  கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது  தவறு  என்றும், அப்படி  வழிபடுபவர்கள்  அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

     உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?

     “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

     ஊரிலே  வாழும்  பெரிய  மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து  வேற்றுமைகளைக்  களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள்.   ஒரு   சிறிய  உருவத்திற்கு  இவ்வளவு  பெரிய   தேரா?
நூற்றுக்கணக்கான  மக்கள்  உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது  அறிவுடையமையாகுமா?  இதனால்  எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?