பக்கம் எண் :

14சித்தர் பாடல்கள்

     யாருக்கும்   புலனாகாத   கடவுள்  அறிவின்  வடிவானவர்.  அவரே
ஆதிசித்தநாதர்,  அவரை  சித்தத்தினால்  மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில்  அவரை  வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம்,  கொட்டாம்,  முழக்காம் -  இவையெல்லாம்  வெறும் புரளி.
அறிவற்றவர்  செய்யும்   புரளி.  இதனை   அறிவுடைய  மக்களே  ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.

     ஆனால்   அவரது   கொள்கையை    இவ்வுலக   மக்கள்  ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.

மூடப்பழக்கங்களைச் சாடுதல்

     சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,

     “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.