வித்தாரம் பேசினும் சோங்கேறி னும் கம்ப மீதிருந்து தத்தாஎன் றோதிப் பரிவுகொண்டாடினும் தம்முன்தம்பி ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ? தில்லை யுள்நிறைந்த கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே. | 15 |
| |
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம் மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே! | 16 |
| |
தவியா திரு நெஞ்சமே தில்லை மேவிய சங்கரனைப் புவியார்ந் திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை ஐந்தெழுத்தால் செவியாமல் நீ செபித்தால் பிறவாமுத்தி சித்திக்குமே! | 17 |
| |
நாலின் மறைப்பொருள் அம்பல வாணரை நம்பியவர் பாலில் ஒருதரம் சேவிக்கொ ணாதிருப் பார்க் கருங்கல் மேலில் எடுத்தவர் கைவிலங் கைத்தைப்பர் மீண்டுமொரு காலில் நிறுத்துவர் கிட்டியும் தாம்வந்து கட்டுவரே. | 18 |
| |
ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர்தம்மைப் போற்றா தவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில் சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே. | 19 |
| |
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, எம் கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண் எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே! | 20 |
| | |
திருச்செங்காடு நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே இருப்பார் திருவுளம் எப்படி யோஇன்னம் என்னை அன்னைக் கருப்பா சயக்குழிக்கே தள்ளு மோகண்ணன் காணரிய திருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே. | 1 |