திருவொற்றியூர் ஐயுந் தொடர்ந்து, விழியுஞ் செருகி, அறிவழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான் செய்யுந் திருவெற்றி யூர்உடையீர்! திரு நீறுமிட்டுக் கையுந் தொழப் பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே. | 1 |
| | |
சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில் நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே! | 2 |
| | |
திருவிடைமருதூர் காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவர் ஓங்குவிண்ணோர் நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே. | 1 |
| | |
தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால் தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே. | 2 |
| | |
திருக்கழுக்குன்றம் காடோ? செடியோ? கடல்புற மோ? கனமே மிகுந்த நாடோ? நகரோ? நகர்நடு வோ? நலமே மிகுந்த வீடோ? புறந்திண்ணை யோ? தமி யேன்உடல் விழுமிடம்? நீள்தோய் கழுக்குன்றி லீசா! உயிர்த்துணை நின்பதமே! | 1 |
| | |
திருக்காளத்தி பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி, முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே! | 1 |