பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்123


சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!
3
  
கையார ஏற்றுநின் றுஅங்ஙனந் தின்று, கரித்துணியைத்
தையா துஉடுத்தி, நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா என்று ஓலம் இடுவது என்றோ? கயிலாயத்தனே!
4
  
நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்து உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற்று ஆனந்த மேற்கொண்டு, மார்பில் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ? கயிலாயத்தனே!
5
  
செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்
எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே!
6
  
மந்திக் குருளையொத் தேன்இல்லை; நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான்என்செய் வேன்எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவில் குருளையை ஏந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்த னே !கயி லாயத்தனே!
7
  
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே!
8
  
                    மதுரை

விடப்படு மோ இப் பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படு மோ? நின் அருளின்றி யேதினமே அலையக்
கடப்படு மோ? அற்பர் வாயிலில் சென் றுகண்ணீர் ததும்பிப்
படப்படு மோ? சொக்க நாதா! சவுந்தர பாண்டியனே!