பக்கம் எண் :

124சித்தர் பாடல்கள்



1.
                     பொது

உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு,
                                          உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு,
                                      அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன
                                      வான்பிறைக்கே?

  
2.வீடு நமக்குத் திருவாலங் காடு; விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம்; ஓங்குசெல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம்தர; நன்னெஞ்சமே!
ஈடு நமக்குச் சொலவே ஒருவரும் இங்கில்லையே!
  
3.நாடிக்கொண்டு ஈசரை நாட்டமுற் றாயிலை; நாதரடி
தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலை; செக மாயைவந்து
மூடிக்கொண் டோமென்றும், காமாயு தங்கள் முனிந்தவென்றும்
பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போல இல்லை பித்தர்களே!
  
4.கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!
  
5.கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே!
  
6.சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே?