பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்131


 பெருமுட்டுப் பட்டவர் போல் அழும் பேதையீர் பேத்துகிறீர்
ஒரு முட்டும் வீட்டும் அரன் நாமம் என்றைக்கும் ஓதுமினே !
  
2.மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !
  
3.ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
போயாகிலும் உண்மையைத் தெரிந்தாயில்லை பூதலத்தில்
வேயார்ந்த தோளியர் காமவிகாரத்தில் வீழ்ந்தழுந்திப்
பேயாகி விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே?
  
4.அடியார் உறவும் அரன் பூசை நேசமும் அன்புமன்றிப்
படி மீதில் வேறு பயனுளதோ? பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக்கலங்கள்
தடியால் அடியுண்ட வாறொக்கும் என்றினஞ் சார்ந்திலரே.
  
5.ஆங்காரப் பொக்கிசம் கோபக் களஞ்சியம் ஆணவத்தால்
நீங்கா அரண்மனை பொய்வைத்த கூடம் வீண் நீடிவளர்
தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்
பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே?
  
6.ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி
விழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டுமென்றே !
  
7.நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ? பெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவர் ஆர்? அருந்துவர் ஆர்? அதுபோல் உடம்பு
தீக்கிரை யாவதல்லால் ஏதுக்கு ஆம்? இதைச் செப்புமினே !
  
8.கச்சில் கிடக்கும் கனதனத்தில் கடைக் கண்கள் பட்டே
இச்சித் திருக்கின்ற ஏழை நெஞ்சே இமவான் பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணா முலை பங்கர் பாதத்திலே
தைச்சுக் கிடமனமே ஒரு காலும் தவறில்லையே.