| 59. | மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும் கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண் ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே ! |
| | |
| 60. | சற்றாகிலும் தன்னைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில் சென்று என் பெற்றாய்? மடநெஞ்சமே? உனைப் போல் இல்லை பித்தனுமே |
| | |
| 61. | உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவதுள் இண்மையென்று வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே ! |
| | |
| 62. | கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில் வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப் பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின் சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே. |
| | |
| 63. | ஒரு நான்குசாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும் திருநாளும் தீர்த்தமும் வேறுளதோவத் திசை முகனால் வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக் குருநாதனாணைக் கண்டீர் பின்னைஏதுக் குவலயத்தே? |
| | |
| 64. | பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன் பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே ! |
| | |
| 65. | நாப்பிளக்கப் பொய்உரைத்து நன்னிதியந் தேடி நாம்ஒன்றும் அறியாத நறியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்தொளையிற்கால் நுழைத்துக்கொண்டே |