பக்கம் எண் :

134சித்தர் பாடல்கள்

6.அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?
  


7.
       கலிவிருத்தம்

முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே
  


8.
       நேரிசை வெண்பா

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
  
9.வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?
  
10.வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
  




1.
  வெளிப்பட்டபின் பாடிய தலப் பாடல்கள்

       திருவிடைமருதூர்

மென்று விழுங்கி விடாய்க்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே - நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து.