பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்141


8.மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே;
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே.
  
9.கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே;
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே;
  
10.மாற்றும் சலவை மறக்கேனே என்குதே;
சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே.
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
  
11.ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.
  
12.காமக் குரோதம் கடக்கேனே என்குதே!
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே.
  
13.அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே;
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே;
  
14.நீர்க்குமிழி ஆம்உடலை நித்தியமாய் எண்ணுதே!
ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே.
  
15.கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே.
  
16.அநித்தியத்தை நித்தியம் என்றாதவராய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனை மறக்கேன் என்குதே.
  
17.நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
உரகப் படத்தல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே.
  
18.குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே;
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே.
  
19.மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே.
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா!
  
20.கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா!
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)