பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்143


34.பாசம் எரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனைஎன்று அளித்தையிலை;
  
35.அடிமை என்று சொன்னையிலை; அக்கமணி சந்தையிலை;
விடும் உலகம் நோக்கி உன்றன் வேடம் அளித்தையிலை;
  
36.உன்னில் அழைத்தயிலை; ஒன்றாகிக் கொண்டையிலை;
நின் அடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை;
  
37.ஓங்கும் பரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
  
38.நாமம் தரித்தையிலை; நான் ஒழிய நின்றையிலை;
சேம அருளில் எனைச் சந்தித்து அழைத்தையிலை;
  
39.முத்தி அளித்தையிலை; மோனம் கொடுத்தையிலை;
சித்தி அளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை.
  
40.தவிப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை;
  
41.நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை;
துன்றுங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை;
  
42.கட்ட உல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்என்று நீ நிறுத்திக் கொண்டையிலை.
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
  
43.கடைக்கண் அருள் தாடா! கன்னி வனநாதா!
கெடுக்கும் மலம் ஒறுக்கிக் கிட்டிவரப் பாரேடா!
  
44.காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடம் தான் தீரேனோ!
  
45.உன்னைத் துதியேனோ! ஊர்நாடி வாரேனோ!
பொன் அடியைப் பாரேனோ! பூரித்து நில்லேனோ!
  
46.ஓங்காரப் பொன் சிலம்பின் உல்லாசம் பாரேனோ!
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ!