பக்கம் எண் :

144சித்தர் பாடல்கள்

47.வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ!
சூரர் கண்டு போற்றும் அந்த சுந்தரத்தைப் பாரேனோ!
  
48.இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ!
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ!
  
49.ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ!
மானைப் பிடித்து ஏந்தும் மலர்க்கரத்தைப் பாரேனோ!
  
50.மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ!
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ!
  
51.கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ!
தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ!
  
52.அருள் பழுத்த மாமதியாம் மான் அனத்தைப் பாரேனோ!
திருநயனச் சடை ஒளிரும் செழுங்கொழுமை பாரேனோ!
  
53.செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ!
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ!
  
54.முல்லை நிலவெறிக்கும் மூரல்ஒளி பாரேனோ!
அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ!
  
55.மகரம் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ!
சிகர முடி அழகும் செஞ்சடையும் பாரேனோ!
  
56.கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ!
பொங்கு அரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ!
  
57.சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ!
எருக்கறு கூமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ!
  
58.கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ!
அக்கினியை ஏந்திநின்ற ஆனந்தம் பாரேனோ!
  
59.தூக்கிய காலும் துடி இடையும் பாரேனோ!
தாக்கும் முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ!
  
60.வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ