பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்145


61.அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ!
  
62.சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ!
சந்திர சேகரனாய்த் தயவு செய்தல் பாரேனோ!
(கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!)
  
63.கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேடா!
பட்டநாள் பட்டாலும் பதம் எனக்குக் கிட்டாதோ!
  
64.நற்பருவம் ஆக்கும் அந்த நாள் எனக்குக் கிட்டாதோ?
எப்பருவமும் சுழன்ற ஏகாந்தம் கிட்டாதோ?
  
65.வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்சுத்தி கிட்டாதோ?
  
66.வெந்துயரைத் தீர்க்கும் அந்த வெட்ட வெளி கிட்டாதோ?
சிந்தையையும் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ?
  
67.ஆன அடியார்க்கு அடிமை கொளக் கிட்டாதோ?
ஊனம்அற என்னை உணர்த்து வித்தல் கிட்டாதோ?
  
68.என்னென்று சொல்லுவண்டா? என்குருவே! கேளேடா!
பின்னை எனக்குநீ யல்லாமல் பிறிதிலையே.
(கலை வனநாதா! - கன்னி வனநாதா)
  
69.அன்ன விசாரமது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
  
70.உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ?
  
71.ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ
  
72.வாக்கு மனாதீத அகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள்குருவே! நின் தாள் இணைக்கே யான் போற்றி!