பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்17


வேண்டிய  எல்லாப்  பலன்களும்  இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும்
என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல்.

     “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
     சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
     சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
     சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

     அந்தி,  காலை,  நடுப்பகல்  ஆகிய  மூன்று  வேளைகளும் புண்ணிய
தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்.

    சந்தியாவந்தனம்,  முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள்,
செபங்கள்   இவற்றால்   கிடைக்கும்  பயனும்,  இராம  நாம   உச்சரிப்பில்
கிடைக்கும்.  உள்ளத்தில்  உருப்பெரும்  அறிவும் இராம நாமத்தால் மிகுந்த
வளர்ச்சி    யடையும்.    இவ்வாறு   இராம    நாமத்தின்   பெருமையை
எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

     நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே
     தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
     சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
     இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்

என்ற  கம்பரின்  தனிப்பாடல்  கருத்து  சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து
விளங்குவதைக் காணலாம்.

     வைணவத்   தெய்வமான   இராமனின்   பெருமைமிகு  மந்திரத்தைப்
போலவே சைவர்களின் தெய்வமான  சிவபிரானின் சிவமந்திரமும் பெருமைக்
குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார்.