பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்21


நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.
8
  
மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்
9
  
அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
10
  
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.
11
  
கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே.
12
  
நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.
13
  

              யோக நிலை

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.

14