பக்கம் எண் :

22சித்தர் பாடல்கள்

                 ஞான நிலை

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துஉணர்ந்து கொள்ளுமே.
15
  
                 யோக நிலை

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.
16
  
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
17
  
அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.
18
  
அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?
19
  
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.
20
  
சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
21