பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்219


கட்புலன் காணவொண்ணாப்                     பசுவே
     கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப்                       பசுவே
     உன்னத மெய்வாயே.
43
  
சுட்டியுங் காணவொண்ணாப்                      பசுவே
     சூனிய மானவஸ்தை
ஒட்டிப் பிடிப்பாயேல்                          பசுவே
     உன்னை நிகர்ப்பவர்யார்.
44
  
தன்மனந் தன்னாலே                           பசுவே
     தாணுவைச் சாராதார்
வன்மர மொப்பாகப்                            பசுவே
     வையத் துறைவாரே.
45
  
சொல்லென்னு நற்பொருளாம்                    பசுவே
     சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை                        பசுவே
     எப்பொருளுஞ் சொல்லுமே.
46
  

பலரொடு கிளத்தல்

குறள் வெண்செந்துறை

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

47
  
மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே.
48
  
காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
49
  
பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
50
  
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
51