பக்கம் எண் :

24சித்தர் பாடல்கள்

             உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.
28
  
             ஞான நிலை

பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.
29
  
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்தஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே.
30
  
             யோக நிலை

நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும்நீரும் உம்முளே நினைத்துகூற வல்லிரேல்
கருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.
31
  
பாட்டிலாத பரமனைப் பரலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டி மெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே.
32
  
             தரிசனம்

செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
33