பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்379


மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற
     மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா
     உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே
     அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்;
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்
     திருநடனங் காணமுத்தி சித்தியாமே.
10
  
ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே
     இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு
     வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்
     தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்
     சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.
11
  
ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே
     எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே
     அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்;
     விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி;
     திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.
12
  
குருவாக உமைபாக னெனக்குத் தந்த
     கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
     பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
     அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
     ஆகாயம் நின்றநிலை அறியலாமே.
13