பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்387


நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
     நுண்பொருளாஞ் சிற்பரத்தி னூடே நோக்குந்
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
     திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
     புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்;
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
     அனுதினமும் நோக்கிநிற்பார் ஆசா னாமே.
5
  
ஆசானு மீசானு மொன்றே யாகும்
     அவனவளு மொன்றாகும் அது தானாகும்;
பேசாத மந்திரமு மிதுவே யாகும்;
     வேரொளியின் வடிவாகும்; பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்;
     நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்கு
     இன்பமுடன் கயிலாச மெய்த லாமே.
6
  
எய்தரிய பரமசிவத்தின் மூலந் தன்னில்
     இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
எய்தரிய பரசிவத்தின் மூலந் தன்னில்
     இருசுடரு முதித்தொடுங்கு மிடமேயென்று
மெய்தொழியுஞ் சுழுமுனையே கம்ப மாகி
     மெய்ப்பொருளாஞ் சோதியென மேவி நிற்கும்;
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
     இருநேர மற்றிடத்தே யிறைஞ்சிக் காணே.
7
  
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்;
     காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண்பெண்ணாய் அலியாகி அடியு மாகி
     அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா
     வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
     தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே.
8