பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்393


சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
     சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
     காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
     ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே.
14
  
காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
     காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
     என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
     அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
     சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே.
15
  
தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
     தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
     வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
     சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
     குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.
16