பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும் வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன். என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால் அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு. இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர் ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார். முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக் களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில் கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும் மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச் சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட, இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன. |