சித்தர்களுக்குச் சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம் பாடலில் எடுத்துக் கூறுகின்றார். “சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா” இவர் அத்வைத கொள்கையில் உறுதியுடையவர் என்பது இவரது ஞானப்பாடல்களால் புலனாகிறது. சித்தர்கள் பெரும்பாலும் அத்வைதக் கொள்கையினர் என்பது ஆய்வாளர் முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம். தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும், பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக் காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள் எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய் கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம் கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால் உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய். |