கேளப்பா இப்படியே பிரள யந்தான் கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால் ஆளப்பா அரியயனும் சீவ செந்தும் அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்; நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்; நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால் வாளப்பா காகமென்ற ரூப மானேன் வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. | 48 |
| |
பாரடா இப்படியே யுகங்கள் தோறும் பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ? ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன் வீரடா விமலரிடஞ் செல்லும் போது வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்; காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்! காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. | 49 |
| |
காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. | 50 |
| |
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம் சக்தியும் ஆவியுடையு மான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம் புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம் எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏகபர மானதொரு லிங்கந் தானே. | 51 |