பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்471


தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
     தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
     குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
     மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
     தேனுக்குந் தேவனா யிருக்க லாமே.
52
  
இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
     ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
     பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
     குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
     செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே.
53
  
தானவனே யென்குருவே புசுண்ட நாதா
     தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
     துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
     குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
     சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே.
54
  
சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
     சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
     புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
     மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
     வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே.
55