வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு; மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில் ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்; மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால் காயான சுழுத்தியென் றிதற்கு நாமம் கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே. | 60 |
| |
தானென்ற பலரூப மதிகங் காணுந் தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும் ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும் கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே. | 61 |
| |
நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு; நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு தலையான அக்கினியப் படியே சேரு; சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து மலையாமல் ஏகபரா பரனே யென்று மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க அலையாது மனந்தானும் பரத்திற் சென்று ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. | 62 |
| |
ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும் பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப் பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக் காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும் வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே. | 63 |