பக்கம் எண் :

474சித்தர் பாடல்கள்

போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
     புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
     அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
     நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
     வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே.
64
  
பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
     பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
     ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
     நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
     விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே.
65
  
காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
     கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
     சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
     வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
     நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.
66
  
நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
     நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
     குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
     வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
     கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி.
67