பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்475


அறியாத பாவிக்கு ஞான மேது?
     ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
     பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
     வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
     கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே.
68
  
குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
     கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
     தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
     குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
     பராபரையுங் கைவசமே யாகு வாளே.
69
  
ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
     அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
     இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
     புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
     வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே.
70
  
பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
     பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
     அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
     நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
     விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே.
71