பக்கம் எண் :

514சித்தர் பாடல்கள்

அநித்திய மானது தேகம்-அதில்
     ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந் தால்அந்த போகம்-ஒன்று
     தானாகி நிற்பது வேசிவ யோகம்.
21
  
விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய
     வேதனைக் குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு
     தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே.
22
  
கோடான கோடி தவங்கள்-அந்தக்
     கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ்செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது
     பண்ணுமுன் நண்ணும் துன்ப அமலங்கள்.
23
  
அந்தக் கரணவி லாசம்-அதை
     யாராலும் தள்ளக்கூ டாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற்
     தோன்றாமற் தோன்றுஞ் சுயம்பிரகாசம்.
24
  
நாமசொ ரூபமே சித்தி-அதை
     நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து-எங்கும்
     நிச்சய மாகும் நிரந்தர வத்து.
25