பக்கம் எண் :

550சித்தர் பாடல்கள்

26. ஏகநாதர் என்ற
பிரம்மானந்தச் சித்தர் பாடல்

     இவர்  பிற்கால  அகத்தியரின்   மாணாக்கர்  என்று  கருதப்படுகிறார்.
அகத்தியர்  பலர்.  அவருள்  எந்த  அகத்தியரின் மாணாக்கர் இவர் என்று
அறிய முடியவில்லை.  ஆனால்,  இவருடைய  இயற்பெயர் ‘ஏகநாதர்’ என்று
தெரிகிறது.

    இவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவராக
இருக்கலாம்  என்று கருதப்படுகிறது.  இவர் தம் பாடல்களில்  ஆதி சிவனை
மெய்ப்பொருள்  என்றும், பூரணம்  என்றும், காலையும்  மாலையும் கண்டது
கொண்டு கற்பூர தீபமுடன் மாதொரு பாகனைத் தொழவேண்டும் என்கிறார்.

     இவர்  பாடல்களில்  ஞானமும் யோகமும் பெரிதும்  பேசப்படுகின்றன.
34 கண்ணிகள் கொண்ட பாடல்கள் எண்ணி எண்ணி மகிழத்தக்கன.

காரண மான கணபதி
     சற்குரு கர்த்தனுங் காப்பாமே
நாரணன் நான்முகன் நல்ல
     குருமுனி நாதனுங் காப்பாமே.
1
  
முன்கலை யான முடிவான
     சோதியின் முற்றிலும் தானறிந்தே
பின்கலை யான பிரமாண்ட
     சோதியைப்பேணித் துதிப்பேனே.
2