பக்கம் எண் :

576சித்தர் பாடல்கள்

31. சதோக நாதர் என்ற
யோகச் சித்தர் பாடல்

     நவநாத  சித்தர்களில்  இரண்டாவதாக  வைத்துப் போற்றப்படுபவரான
சதோகநாதர் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்தவராகக் கருதப்படுகின்றார்.
இவர்  யோக  ஞானம்  பற்றி அதிகம்  பாடியதால்  ‘யோக சித்தர்’ என்றும்
குறிக்கப்படுகின்றார்.

    நாற்பத்திரண்டு கண்ணிகள் கொண்ட இவரது பாடல் தொகுப்பில் காப்பு
செய்யுளாக இவர்,

“அக்கரங்கள் தோன்ற அருள்கொடுக்கும் பூரணியென் 
பக்க மிருந்து பலகலையுஞ் சொல்வாளே”

“வாலை யபிராமி மாரிதிரி சூலியருட்
பாலை யெனக்கருளும் பார்வதியின் தாள்போற்றி”

“அம்பிகை மால் சோதரி யென்னாத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞானக் குயிற்கண்ணி கூறுவனே”

என்று அம்பிகை வணக்கம் கூறுவதால் இவர் சக்தி வழிபாட்டினர் என்பதை
உணரலாம்.

     அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை தெரிந்து வஞ்சகங்கள் அற்று
மகிழ்ந்திருந்தேன்.   மாங்குயிலே   என்பதனால்   இவர்   ‘சிவயநம’  சிவ
வழிபாட்டிற்கு மந்திரம் உரைக்கும் சைவர் என்பது உறுதிப்படுகின்றது.

     ‘ஊமை  யெழுத்தாலே தான்  ஓங்காரமாகினதைச் சீமையிலுள்ளோர்கள்
தெளிவரோ   மாங்குயிலே’  என்று  கேள்வி  கேட்டு  அதற்கு  விடையாக,
‘அட்டாங்க யோக மறிந்து தெரிந்த பின்பு வெட்டவெளி உண்மை விளங்கும்’
என்று உணர்த்துகின்றார்.