பாசபந்தம் விட்டுப் பரகதிஎன் றேயிருந்தால் பேசஒண்ணாப் பிரமம் பிறக்குமே மாங்குயிலே. | 29 |
| |
அந்தக்கர ணத்தை அடக்கிப் பரவெளியைச் சொந்தமென நம்பித் துதிப்பாய்நீ மாங்குயிலே. | 30 |
| |
சுத்தப் பிர மத்தின் தொடர்புவழி யேகாணில் முத்தியைத் தேட முழிப்பாயோ மாங்குயிலே. | 31 |
| |
எக்கனியை யும்பரித்து ஏக்கமறச் சாப்பிடலாம் கைகனியே பிரமமெனக் கண்டுதேர் மாங்குயிலே. | 32 |
| |
துர்க்கந்தத் தால் எடுத்த தூலமிது பொய்யென நீ நற்கந்த மானசுக ஞானம் அறி மாங்குயிலே. | 33 |
| |
வெட்டவெளியதனில் மெய்ப்பொருளைக் கண்டபின்பு பட்டப் பகற்தீபப் பார்வையேன் மாங்குயிலே? | 34 |
| |
எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே. | 35 |
| |
சத்தாகிச் சித்தாகித் தாபரமுந் தானாகி வித்தாகி வந்த விதம்தெரிவாய் மாங்குயிலே. | 36 |
| |
அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க் கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே. | 37 |
| |
ஆதிசகத் தென்றும் அனாதி மகத்தென்றும் சோதிச் சுயவடிவாய்த் தோன்றுமே மாங்குயிலே. | 38 |
| |
பார்க்குள் ஆகாயமதைப் பார்த்துப்பார்த்து எல்லைகண்டு யார்க்கும் சொல்எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே. | 39 |
| |
அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக் கண்டறிந்து கொண்டேன் கவலைவிட்டேன் மாங்குயிலே. | 40 |
| |
அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்றகுரு மணியாய் விளங்கும் மகிமைஅறி மாங்குயிலே. | 41 |
| |
பற்றற்று நின்றே பரவெளியைக் கண்டேன்நான் வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே. | 42 |