பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 100

உரையாடல் :

(வேறு)

“கண்களும் கண்களும்
       காதற் குழந்தையைக்
       கண்டிடல் என்றைக்?” கென்றாள்!
பெண்களும் பெண்களும்
       நோற்கும் அழகினைப்
       பெற்ற பெருமையினாள்!
“காலமும் காலமும்
       சேர்ந்திடு காலையிற்
       கண்டிடற் கூடு” மென்றான்!
சீலமும் சிந்தையும்
       ஒன்றித் திகழ்ந்திடும்
       தெய்வம் நிகர்த்தபிரான்!

“தவத்தில் தவத்தில்
       எதிர்வந்த தத்துவம்
       சாற்றிட வேண்டும்” என்றாள்!
அவத்தில் அவத்தில்
       அழுந்துதல் இல்லைநாம்
       அக்கரை சேர்வம்!” என்றான்!

(வேறு)

சென்றனர் அன்பினர்! கரம்
       சேர்த்தனர்! கண்டனர் நதி!
       சிந்தினர் சிறந்த நகைப்பை!
நின்றனர்! நெருங்கினர் நன்
       னெஞ்சினர் கொஞ்சினர்! அலை
       நீந்தின! ஏந்தின மகிழ்வை!