துள்ளின! அள்ளின! மனம்
தூர்த்தன! போர்த்தன! ஒளி
சொல்லின! மெல்லின ஒலியைத்
தள்ளின! புள்ளினம் எனத்
தத்தின! முத்தின! குமிழ்
தந்தன! வந்தன விரைந்து
ஈண்டின! வேண்டிட என!
எண்ணின! நண்ணின! மலர்
ஏந்தின! நீந்தின நெகிழ்ந்து!
தாண்டின! தீண்டின கரை!
தாவின! கூவின! நுரை
தாங்கின! ஓங்கின மகிழ்ந்து!
(வேறு)
அலைக்கரம் நீள்வுறாமல்
அடிபணிந் தேகுகின்ற
கலைமணற் குவிந்த மேட்டுக்
கரையினில் அவர்அ மர்ந்தார்!
(வேறு)
“வெள்ளத்தில் வழிந்து வரும்
வேட்கையைக் காணுவிர்” என்றாள்
வீணையை விளம்பும் மொழியாள்!
“உள்ளத்தில் வழிந்து வரும்
உவகை உவமை” என்றான்
ஒப்பனை உரைக்கும் உரவோன்!
“உவகை பெருகி வர
வுற்றதை உரைப்பிர்” என
உவந்து கேட்டனள் ஆயிழை!
*“அவனும் அவளும்,’ வர
அறிந்த உரோகிணியின்
ஆனந்த நடனம்” என்றனன்!
*ஈண்டு, ‘அவனும் அவளும்’ என்றது அரசர் தம்மையும்
மாயாதேவியையும்
குறித்துக் கூறியதாகும்
|