பக்கம் எண் :

99தமிழ்ஒளி கவிதைகள்

(வேறு)

பெண்அன்னம் எழுந்துதன்
       கைகள் கூப்பிப்
              பேரரசர் திருவடியில்
                     வீழ்ந் திறைஞ்சிக்
கண்பனித்தாள்! அருட்கணவர்
       கலக்க மெய்திக்
              கைகளாற் சேர்தெடுத்துக்
                     கன்னம் ஒற்றி,
“விண்மதியே! குலவிளக்கே!
       வேதப் பாவாய்!
              விடியும்நம் நாள்!” என்றார்
                     வேட்கை மீறி!
நண்ணியநற் குரல்கேட்டாள்!
       உணர்வின் மீண்டாள்!
              நாயகர்என் றறிந்துள்ளம்
                     நாணி நின்றாள்!
“உள்ளத்துள் அனைத்தையுமே
       உணர்கின் றேன்நான்!
              உரோகிணியின் அலைக்கரங்கள்
                     அழைக்கும் என்னை!
வெள்ளத்தை எதிர்காணும்
       வேட்கை கொண்டேன்!
              வேண்டினேன்!” என்றன்னம்
                     இறைஞ்ச மன்னர்
கள்ளொத்த இதழாளின்
       கைகள் பற்றிக்
              கால்பெயர்த்தார் காதலர்கள்
                     நடக்க லானார்!
புள்ளொலிக்கும்! மலர்சிந்தும்!
       ‘ஆ’ஒன் றாங்கு
              புன்கன்றை ‘என்அம்மா’
                     என்று கூவும்!