பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 98

சுத்தோதனர் மாயாதேவியைப் பார்த்தல் :

(வேறு)

ஓவியம் என்ன ஆங்கே
       ஒளியுடன் இருந்த மாயா
தேவியைப் பார்க்க மன்னர்
       திடுமென வந்து சேர்ந்தார்!

“உயிர்க்கெலாம் அன்னை போன்ற
       ஒலியுடன் திகழும் இந்த
மயிலினை மலடி என்றல்
       மாண்பிலார் உரையை ஒக்கும்!”

மன்னரின் மனத்தி னுள்ளே
       மலர்ந்திடும் எண்ணம் என்ன
அன்னமும் கண்விழித் தாள்!
       அவளெதிர் அரசர் நின்றார்!

(வேறு)

எதிர்நின்ற அரசரை
       இறைவனின் உருவமாய்
              எண்ணினள் இனிய மாயா!

உதிர்கின்ற மலர்களாய்க்
       கண்களில் நீர்வர
              உடல்சிலிர்ப் பெய்த அன்பு

முதிர்கின்ற சொற்களால்
       மொழிந்தனள் : “இறைவனே!
       மூத்துள மலடு போக்கிக்

கதிர்எனும் மைந்தனை
       உயிர்த்திடச் செய்குவிர்!
              கழலினை சரணம்!” என்றாள்!