|
நின்றுருகி வான் பார்த்தார்!
ஆறு பார்த்தார்!
நெடுந்தூர மலைச்சிகரம்
பார்த்தார்! உள்ளம்
அன்றுருகி அலைபொங்க
அவர் நடந்தார்!
அரண்மனைக்குக் கனவுலகம்
கொண்டு சென்றார்!
(வேறு)
என்றுங் காணா வகையில் இயற்கைக்
காட்சிகள் எல்லாம் கண்ணிற் றோன்ற
மாயாதேவி மனம்நெகிழ் வுற்றாள்.
அன்று,
அரசர் பக்கல் அவள்இருந் துரைத்த
மொழிகள் ஞான முதிர்வைக் குறிக்கும்;
“அரசே! இன்றென் அகங்கனி வுற்றது!
பகலும் இரவும் பனிநீர் ஆகி
வழிந்தென் மேனியில் வடிந்திடு கின்றன!
நிலவும் கதிரும் நிரல்பட நின்று
நிழலும் இழையும் நெளிவுறு கின்றன!
நினைவும் கனவும் நெய்திடு கின்றன
நெய்த ஆடையை என்முன் நீட்டி!
மாயை என்ற மாபெருந் தாயே!
விரிந்த வெண்பட்டு விதானத்தின் கீழ்,
தவத்தில் அமர்ந்து தாரணி காப்பாய்!
அறம்என் கின்ற ஆழியை உருட்டி
மறம்தொலைக் கின்ற மகவைப் பெறுவாய்!”
என்றெனை அழைக்க எழுந்தேன் அரசே!
|