பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 106

இனி நான்,
உடலும் உயிரும் உளமுந் தூய்மை
அடைய நோற்பேன் அப்பெரு நோன்பை!
ஐம்புலப் பேயை அடக்கி ஒழிப்பேன்!
செம்புலப் பெய்நீர் போலென் சிந்தையும்
அன்பும் ஒன்றாய் அமையச் செய்வேன்!
அறம்நின் றோங்கும் ஆரா தனையைப்
புறமும் அகமும் பொலியச் செய்வேன்!
அருள்சுரந் தூட்டும் ஆறாய்ப் பெருகிப்
பொருள்சுரந் தூட்டும் புனிதஞ் செய்வேன்!
எண்வகை விரதம் இவ்விதங் காப்பேன் !
மண்வகை உய்ய மாபெரும் வேந்தே!”

வெண்பா

மாயை உரைத்த மணிமொழிகள் வையத்து
நோயை அகற்றுகின்ற நோன்புடைமை - தூய
அருளுடைமை என்றே அரசர் மகிழ்ந்தார்!
இருளுடைமை இல்லை இனி!

“எண்ணம் சிறக்க இயன்றிடுக உன்நோன்பு!
வண்ணம் சிறக்கும் வழிகாண்க!-கண்ணை
இமைகாத்தற் போலுன் இயல்காப்பேன் என்றார்”
அமைந்த அரசர் அவர்!

(வேறு)

அந்தக் கணமே அகன்றனர் மன்னர்
சிந்தை யுலகிற் சேணெடுந் தூரம்!
தாயைத் தங்கையைத் தமக்கையைப் போன்று
மாயை தன்னை மதித்தனர் மன்னர்!
அண்மையில் இருந்தும் அண்மையில் இன்றிப்
பெண்மையின் நோன்பைப் பேணினர் மன்னர்!
அந்நாள்,