பக்கம் எண் :

109தமிழ்ஒளி கவிதைகள்

விண்மீன் :

(வேறு)

பனிவெண் யானை உருவம் கரைந்து
வெண்ணெய்த் திரளாய் விண்ணிற் சிவந்த
தாரகை ஒன்றாய்ப் பேரொளி கொண்டு
காற்றிற் சிந்தும் கற்பக மலர்போல்
மாயை தன்சீர் மடியில் இறங்கித்
தவழ்ந்து பொலிந்து சரிந்து திரிந்து
புகழ்ந்து வயிற்றிற் புகுந்து கொள்ளக்
கண்கள் கனவிற் கலந்து துள்ள
இன்பம் உடலில் எங்கும் பரவத்
துன்பம் தொலைந்த சுடர்ஓங் கியதே!

மாயாதேவியின் நிலை :

(வேறு)

தாரகை வயிற்றிற் பாய்ந்து
தந்ததோர் இன்பத் தாலே
பாரகம் புரக்கும் ஞானப்
பரிதியைச் சூல்கொண் டாற்போல்
தாரகம் துணிந்த மாயை
தன்றுயில் நீங்கி ஆழி
நீரகம் உயிர்த்த இப்பி
நிலையினை அடைய லுற்றாள்!