தென்றலின் தீர்ப்பு
மண்போட்டியைத் தொடங்குகிறது:
மண் சொல்லும்; மலை, அருவி, இனியதென்றல்
மணமிக்க மலர் சோலை, ஏரி, ஆறு,
தண்கடல், நல்வயல்,பச்சைப்புல் நிலங்கள்,
தருக்கூட்டம் - இவைகளிடை வாழ்கின் றேன்நான்!
எண்ணற்ற உயிரினங்கள் என்வ யிற்றில்
இருந்துபிறந் தெழிலுடனே வளரும்; ஆனால்
“விண்ணென்பார்! நீலவான் என்பார்!” - அந்த
‘வெறும் வெளியைப்’ புகழ்வார்கள் மனிதர் எல்லாம்!
விண்ணின் வீறாப்பு :
விண்ணியம்பும்: மண்ணுக்கு வாய்த்த ‘இன்ப
விதை’ என்றன் விழியொளியின் வீச்சுத் தானே!
கண்ணேது மண்ணுக்கு? நான்ஈன் றிட்ட
கதிர்ப்புதல்வன் இல்லானேல் ஒளிதான் ஏது?
தண்திங்கள் என்புதல்வி இல்லா விட்டால்
தமிழ்போன்ற இன்பமதற் கேது - மற்றும்
கண்பறிக்கும் என் ‘மீனின்’ காட்சி எங்கும்
காணரிய நல்லழகுக் காட்சி யன்றோ?
சூடேறிக் கொதிக்கின்ற மண்ணில் நல்ல
சுவைபொருள்கள் சேர்ப்பதென் வியர்வை யன்றோ?
காடாகிக் கிடக்கின்ற அங்கே எழிலைக்
காட்டுகின்ற கண்ணாடி நான்தான் அன்றோ?
மேடு, பள்ளம் என்னிடத்தில் இல்லை யன்றோ?
விரிவொன்றே என்நோக்கம்! பொருள் இருந்தும்
மூடாத பெட்டிநான் அன்றோ? அந்த
முதுவையம் ஈதொப்ப மறுப்ப தென்னே!
|