பக்கம் எண் :

12தமிழ்ஒளி கவிதைகள்

தென்றல் உண்மையை விளக்கி, தீர்ப்புக் கூறிற்று :

காற்றுதன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு
கனிவுமிகும் நியதிஎனுந் தென்றல் ஆகி
சாற்றும்இரு வரிடையும் நீதி : சற்றே
தயவுசெய்தென் சொல்கேளும்! இயற்கை அன்னை
மாற்றுயர்ந்த செம்பொன்னின் ஆடை போர்த்து
மண்மீதில் படுத்திருப்பாள்; வானில் சென்று
காற்சிலம் பொலிக்கநடம் ஆடி இன்பம்
கண்டிடுவாள்! விண்மண்ணை உடலாய்ப் பெற்றாள்!

“இயற்கைத்தாய் உறைவிடம்நீர் இருவ ருந்தான்
ஏனிந்தப் போட்டிஉ மக்குள்? மனிதர்
செயல்தன்னை நாம்செய்யத் துணிய லாமோ?
சிந்திப்பீர்!” எனத்தென்றல் சிரித்துச் சொல்லும்
வியப்புடனே விண், மண்ணை நோக்கும்!- மண்ணும்
விரிக்குந்தன் பசுங்கரத்தைத் தென்ற லாலே
ஐயமெலாம் நீங்கிற்று! - விண்ணும் மண்ணும்
அகம்மகிழ்ந்து தென்றலோ டுறவு கொள்ளும்!

“நவசக்தி” - 1948