பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 13

துறைமுகத் தொழிலாளி

துறை முகத்தில் வேலைசெய்யும்
        ஏழைத் தொழிலாளி
சிறை போன்ற வாழ்க்கையிலே
        கைதியெனச் சிக்கியவன்
பொல்லா வறுமைக்குப்
        போக்கிடமாய் நிர்க்கதியாய்ச்
சொல்லா மனத்துயரில்
        சோகவுரு வானான்!

வேசையும்தன் கண்மூடி
        வெட்கமுறும் வண்ணம்
ஆசைமனை விக் கரை
        முழத்துக் கந்தலுடை!
பிள்ளைகளோ பன்றிகளின்
        பின்திரியும் குட்டிகளாம்!
நொள்ளை முடமாகி
        நோய்கொண்ட பெற்றோர்கள்!

இந்தப் பெரும் குடும்பம்
        என்றும் வசித்துவர
கந்தல் படுதாவில் கட்டியதோர்
        மாளிகை யாம்;
கோணி அதன்மேலே
        கூரை பழந்தகரம்
தூணோ சிறுகொம்பு;
        தொட்டில் பழங்கந்தை!