சாக்கடையின் தேக்கம்
சரிந்துவிழும் ஓரத்தில்
மூக்குடைக்கும் நாற்றத்தில்
வாழும் முறைகற்றார்!
கொட்டும் பசிப்பிணியும்
கொந்தும் கொடுநோயும்
சொட்டும் பனிக்குளிரும்
தொல்லைப் படுத்துகையில்
கண்ணீர் விடுவதுண்டு,
காட்டாற்று வெள்ளம் போல்!
புண்ணாகி நெஞ்சமெலாம்
போது கழிவதுண்டு!
பஞ்சம் வரக்கண்டு
பஞ்சை மகன் அவனும்
கொஞ்சம் இருந்ததொரு
நம்பிக்கை குன்றிவிட்டான்!
சுயராஜ்யம் வந்ததெனச்
சொன்னார்கள்; அந்தச்
சுயராஜ்யம் யார்க்கென்று
சொல்லிடுவீர் நாட்டீரே!
ஒற்றைக் கிரட்டை விலை
ஏறியுமே உட்கார
வெற்றிலைக்கு நான்குவெள்ளி
விக்கிரயம் ஆயிற்று!
இந்நிலையில் அவ்வேழை
என்னகதி யடைவான்!
செந்நீர் வியர்வைவிழத்
தெம்பெல்லாம் குன்றிவிட
நாளும் உழைத்துவிட்டுப்
பட்டினியை நண்ணிடுவான்!
ஆளும் உலகத்தின்
அக்கிரமம் காணீரோ?
|