பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 15

தானடையும் பட்டினிக்குத்
        தன்றுயரம் ஆற்றிடுவான்;
கூனடையும் பெற்றோர்;
        குழந்தை மனைவி இவர்
சேர்ந்தடையும் துன்பத்தைச்
        சிந்தித்து வாடிடுவான்
ஆர்ந்த பழங்கருங்கல்
        ஆகும் அவன் உள்ளம்!

இப்படியாய்ப் பட்டினியை
        எய்தியதோர் நாளினிலே
கப்பல் துறையிலவன்
        மூட்டைக் கடுஞ்சுமைகள்
தூக்கி நடந்துவந்தான்
        சோகநிழல் போலே
போக்கியது கப்பல்தன்
        நெஞ்சப் புகைதன்னை,

கப்பல் புகை கண்டான்
        தன்வீட்டில் காய்ந்துவிடும்
குப்பை அடுப்பெண்ணிக்
        கொப்பளித்தான் உள்ளமெலாம்
மனைவி அழுகுரலும்
        மக்கள் துடிப்பும்
நினைவிழந்த பெற்றோர்கள்
        நெஞ்சுருகும் கூக்குரலும்

கேட்கும் செவியினிலே
        கண்கள் கிணறாகும்!
மூட்டை முழுபலமும்
        ஏறும் முதுகினிலே
அந்தோ அவன் கால்கள்
        ஆபத்தை நோக்கினவே!
தந்தை அழுகுரலும்
        தாயின் திணறுதலும்